புத்தாடை உடுத்தி நிற்கும்
அந்தி மாலை மேகமே!
உன் தோழி பூமி தேவதை
சிவந்த ஆடை பூண்டதாலா
நீயும் சிவந்த மேனி கொண்டு
உன் நட்பைக் காட்டுகிறாய்?
தோழி அவள் அணிந்திருப்பது
சிவந்த சாயம் இட்டதல்ல
அப்பாவி ஈழ சகோதரனின்
குருதி வடிந்து சிவந்ததென்று
அறியாமல் போனாயோ
பேதை மேகமே?
இல்லை!? அம்மறவரின்
இரத்தம் சிந்தித் தான்
நீயும் சிவந்தாயோ
நீல வானின் வெண்முகிலே?
மனிதனின் சாலை விதிகளில்
சிவப்பின் பொருளுணர்ந்து,
சிங்களக் கொடியவரும்
அதை உணர்ந்திருப்பர் என்றெண்ணி
குழந்தைகள் மகளிரெனப் பாராமல்
குண்டு மழையில் நனைப்பதையும்,
குருதிப் பசியில் தன்னிலை மறந்து
கண்மூடி கொலைகளம் புரிவதையும்,
தீயவை யாவையும் நிறுத்திடச் சொல்லிடவே
சிவந்த மேனி கொண்டாயோ வெண்முகிலே?
பேதை உன் மொழியினை
மனதினில் கொள்வரோ சிங்களவர்?
தமிழர் யாவரையும் கொல்லுவதே
தம் கொள்கையெனக் கொண்டவர்,
தமிழரின் மூச்சினை உயிரினை
நீ நிறுத்திடச் சொல்லுவதாயே எண்ணுவர்.
அடி ஏனடி பயந்துவிட்டாய்?
அதற்குள் முகம் யேன் கருத்துவிட்டாய்?
நாளை ஒன்று மலரும்,
அன்று அமைதி திரும்பும்!
ஈழர் தம் நாட்டில்
இனிய வாழ்வு நிலை மலர்ந்திடும்!
அன்று நீ மகிழ்வின் தென்றலில் குளிர்ந்து,
ஆனந்த வான் மழையை சிந்தி,
இரத்தக் கறை படிந்து சிவந்த
நில மகளின் முகத்தை துடைத்திடு!
Good one! Especially the comparison with the traffic signal!
பதிலளிநீக்கு