திங்கள், 25 அக்டோபர், 2010

பெண்மை



பள்ளிச் செல்லும் ஆசையினில்
மெல்லிய விரல்களால் மலர் தொடுத்து,
கந்தலான ஆடையினை
தைத்துக் கட்டி,
ஆவலாய்க் காத்திருந்தேன் !
எனை யீன்ற தகப்பனோ
கையில் காசுமில்லை,
கடன் வாங்க வழியுமில்லை.
பெண் மகளே, படித்தது போதும்,
ஆண் மகவு அண்ணன் மட்டும்
கல்விச் சாலை கண்டால் போதும் என்று,
அவனை மட்டும் அனுப்பி வைத்தான்!
என்னை அடுக்கிளையில்
தள்ளி விட்டான்!
பெண் மகவாய் நான் பிறந்தது
யார் செய்த பிழையென்று
புரியாத புதிரொன்றை
மனதினில் பதித்து வைத்தேன்,
இன்று வரை பதிலின்றி
எனக்குள்ளே தவிக்கின்றேன்!

மகள், இவள் கன்னிமை அடைந்து
மாதமெட்டு ஆகவில்லை.
அதற்குள், முல்லை பூமுடித்து
பட்டுப் புடவை அணிவித்து
மணமுடித்து அனுப்பிவைத்தார்,
தாம் கண்ட சாபமாய்
எனை கண்ட என் பெற்றோர்.
நான் அறிந்த மணவாளனேனும்
அன்பில் என்னைத் தாங்குவான்
என்றே எண்ணியிருந்தேன்;
கனவுலகில் மயங்கியிருந்தேன்.
வரமாய் நான் எண்ணிய
மாலையிட்ட கணவனோ
மதுவென்ற மாதவிக்கு
தன்னை யிழந்தான்.
கடனில் எனை ஆழ்த்தி விட்டு
தன் உயிரையுந் துறந்தான்.
பதினெட்டு அகவையில்
விதவைக் கோலம்.
எட்டு மாத மகனுடன்
வீதி ஊர்வலம்.
வாழ வழி யரியாத
பிஞ்சு மனதிற்கு,
தோள் சாய்ந்திருந்த மகனே,
வாழ்வின் லட்சியமாய்த் தெரிந்தான்.
என் கொழுந்து வளர்ந்திடவே
கடுமையாய் உழைத்து
இரவு பகல் பாராமல்
என் உயிரினை தேயவிட்டேன்.
நான் பெற்ற அன்பு மகவு
என் தோளினை தாண்டி விட்டான்.
அவனை தாங்கிய
என் வயிற்றில் மிதித்தே
வீதியில் தள்ளி விட்டான்.

நாற்பது வயதினில்
மீண்டும் ஓர் ஊர்வலம்.
காலம் முழுக்க போர் கண்ட
பெண் இவளின் வீதிவலம்.
தோள் கொடுக்க யாருமில்லை;
உயிர் மூச்சைத் தாங்கிடவே
இலட்சியமும் எனக்கில்லை.
மரணமேனும் எனக்கு
ஒய்வு தரட்டும்.
நான் பிறந்த மண்ணேனும்
என் மீது உரிமை கொள்ளட்டும்.
சிந்தித்து நோக்குகிறேன்
செல்லரித்த வாழ்க்கையினை!
கண்ணீரில் கரைக்கிறேன்
என் இதயக் காயங்களை.

புதன், 31 மார்ச், 2010

யார்?



பால்வண்ணக் கிளிஞ்சலுக்குள்
     முத்தினை வைத்தது யார்?
வான கரு மேகங்களுள்
     கூர் வாள் மின்னலினைச் சேமித்தது யார்?
உன் கருவிழிப் பார்வைக்குள்
     ஈர்ப்பு விசை வைத்தது யார்?
என் இருதயக்கூட்டுக்குள்
     உன் நினைவுகளைத் தைத்தது யார்?

கல்லுளிச் சிற்பியின் கண்ணில்
     கல்லுக்குள் கலைமகளைக் காட்டியது யார்?
பச்சை மர வேருக்கு
     நில நீரின் வழிதனைச் சேர்த்தது யார்?
என் அணுக்கள் ஒவ்வொன்றுக்கும்
     நீ என்னவளெனச் சொல்லியது யார்?
உன் அசைவுகள் ஒவ்வொன்றையும்
     காதல் காவியமாய்க் காட்டியது யார்?

கைப்பிடி



கரங்களை விரித்துக்
காத்திருக்கிறேன்
உன் கரங்களைக்
     கைப் பிடிக்கவே!

செவ்வாய், 30 மார்ச், 2010

தொடர்வண்டிப் பயணம்...













தொடர்வண்டிப் பயணம்,
மழை பெய்யும் தருணம்,
தனிமையில் சில நிமிடம்
எனக்குள்ளே சில ஞாபகம்.
மரங்கள், வீடுகள், குளங்கள் யென
உலகமே பின்னுக்குத் தள்ளபட
தொடர்வண்டியோ என்னை
முன்னே செலுத்திச் செல்ல
என் மனம் மட்டும் ஏனோ
     நினைவுகளை தேடிப் பின் செல்கிறது?

தந்தையும் தாயும்
     தமக்கை அவளும் உடனிருக்க
எத்தனையோ பயணங்களை
     இத்தொடர்வண்டியில் கழித்திருக்க
இன்று மட்டும் ஒரு தனிமை
     ஏனோ இந்த வெறுமை?


கல்வி, பணி நிமித்தம் யென
     எத்தனையோ காரணம் கிடைக்க
பாசம், அன்பை உடன் கொள்ள
     காரணம் ஏன் இல்லாதானது?
உறவுகளை விடுத்து
     மற்றவை முக்கியமாய் போனது?

சுதந்திர காற்றில்
     பறந்திட்ட போதிலும்
ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியில்
     சுவைத்திட்ட போதிலும்
ஏன் இந்த தனிமை
     என் மனதில் சில நேரம்?

வாழ்க்கையின் தேடல்
     விளங்கவில்லை சில சமயம்.
எதனை அடைய வேண்டித்தான்
     வாழ்வினில் இத்தனைத் தியாகம்?
பயன் அறியா லட்சியத்தை
     மனதில் ஏற்ற ஒரு பயணம்.

நான் அமர்ந்த தொடர்வண்டி
     என்னிடம் கேட்ட்து,
தனது வாழ்வில் என்றேனும்
     தன் விருப்பத்தில் வாழ்ந்த்துண்டோ?
பிறரை சேர்விடம் சேர்ப்பதுவே
     வாழ்வானதும் சுகமன்றோ? என்று.

அது உரைத்த்தும் உண்மையே!
     உணர்த்தேன் இறை பதிலெனவே!
கடமையை செய்வதிலும்
     எண்ணிலடங்கா மகிழ்வுண்டு!
காண்பவரேல்லாம் உறவுகளாய் உடனிருக்க
     வாழ்வில் என்றும் சுகமுண்டு!

வாழியவே

      எங்கும் நீராய் படர்ந்திருக்கும்     கட்புலன் கடந்துநிற்கும் பேரறிவை வியந்து சுவைத்து     நனைந்து மகிழ்ந்து கலந்து நீரோடையாய்     பரவிக...