குருதி வழிந்தோடும் தசையுண்டு;
எங்கோ
ஒளிந்து நிற்கும் உயிருமுண்டு;
தொட்டு, நுகர்ந்து, கண்டு, நினைந்து
உணரும்
அறிவுண்டு
அன்புமுண்டு; நட்புமுண்டு;
பிணியுமுண்டு;
குறையுமுண்டு;
மனிதனென்ற பெயருமுண்டு;
சிந்தித்திட
மனமுமுண்டு;
எனினும், சுற்றம் எழுதிய
மென்பொரு
ளாளும்
சொல்வதைச் செய்யும்
வன்பொரு
ளானேன்!
என் உள்ளக் கனவுகள் எங்கே?
எனக்கானத்
தனித்துவம் எங்கே?
தென்றலோடு கவியாடும்
கவிஞனெங்கே?
பூங்காவன மலர்களின்
விளையாட்டுத்
தோழனெங்கே?
என் உயிர் பாயும் மனந்தனை
எங்கோ
விட்டெரிந்து தொலைத்தேனோ?
என் கற்பனை சிறகுகளேல்லாம்
காலத்
தீயில் கலைந்தளிந்து போனதுவோ?
நான்,
மந்தையை பின்தொடரும்
வழியறியா
வெள்ளாடோ?
ஆற்று நீரில் கலந்துவிட்டு
பிரிந்திட
முடியா நீர்த்துளியோ?
இல்லை,
தன்னைத் தானே
சிறையில்
தாழிட்டு,
சட்டைப் பையினுள்
தாழ்கோலை
மறைத்துவிட்டு,
மீட்பனுக்காய் காத்து நிற்கும்
மடமையின்
தலைவனோ?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக