ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

வாழியவே

 

 

 

எங்கும் நீராய் படர்ந்திருக்கும்

    கட்புலன் கடந்துநிற்கும் பேரறிவை

வியந்து சுவைத்து

    நனைந்து மகிழ்ந்து

கலந்து நீரோடையாய்

    பரவிக் களித்து விளையாடி

துளித்துளியாய் தூயநீர் சேர்த்துப்

    பெருகி வளரத் துணைநின்று,

பெருக்கால் கரைவுடைந்து

    அழியாத வழிதந்து,

குட்டையாய் தேங்கி

    ஆக்கம் இழந்து

வந்த வழி மறந்து

    வருந்தி வற்றி

தீமைகள் கலந்து

    தூய்மையிழந்து அழியாமல்

வடிகால் பெருகி

    தொடர்ந்து உயிர் சேர்த்து 

ஊரேங்கும் வழிந்தோட

    வளமைகள் வளர்க்க

பெருங்கடல் பேருண்மை நோக்கித்

    திருப்பயணம் தொடர்ந்திட

ஊக்கமளித்து உடன்நின்று

    எண்ணங்களுக்கு உருவளித்த

சான்றாண்மை தகைய

    ஆசிரியர் தமை

புகழ்வதும் போற்றுதலும்

    சாலமும் பொருந்துமே.


எங்கள் உள்ளங்கள் வாழ்த்துதே!

    அன்பு நிறைந்து மணக்கிறதே!

“வாழியவே இறையொளியில்

    வாழியவே நிறைமகிழ்வில் “

என்றே வாயார வாழ்த்துதே!

    நன்றிப் பண்ணிசைக்குதே!

வியாழன், 17 ஜூன், 2021

உன்னிலிருக்கும் அவன்

 





உன்னிலிருக்கும் அவனே

            என்னிலும் இருக்கிறான்.

அவனாகவும் அவளாகவும்

            நாமாகவும் வீற்றிருக்கிறான்.

அதுவெனச் சுட்டுமிடத்திலும்

            அதன் ஆளம் அமர்ந்திருக்கிறான்.

சுட்டிக்காட்ட இயலாதவண்ணம்

            மர்மமாய் மறைந்திருக்கிறான்.

எனினும் அதிசயமாய் அனைத்திலும்

            அவன் முகம் காட்டுகிறான்.



புறமெங்கும் தேடுகையில்

            என் அகத்துள் அகமாய்,

உயிருக்குள் உயிராய்

            ஆன்மாவினுள் கறைந்திருக்கிறான்.

அன்பாய் ஆறுதலாய்,

            கனிவாய் காதலாய்,

பெயரறியாத உணர்வுகளாய்

            ஊடுறுவித் தாங்குகிறான்.



எங்கும் எதிலும்

            மவுனத்திலும் முழக்கத்திலும்

யாவிலும் எல்லையின்றி

            படர்ந்து நிறம்பியிருக்கும் அவனை,

அழகாய் பேருண்மையாய்

            நன்மையாய் இருந்தே,

யாவையும் இணைத்திடும்

            பிளவற்ற ஒருமையாய்,

உயிரோடும் அவனை

            என் அகக்கண்கள் காணாதோ?

பேரின்ப வெள்ளத்தில்

            கறைந்துருகிட மாட்டேனோ?

மண்ணைத் தொட்ட மாண்பு

 



பார் புவி யாவும்
        படைத்தாளும் பரம்பொருள்
பாவத்தில் பரிதவிக்கும்
        படைப்புகள் நம்மில் பரிவுகொண்டு
தன்னிலைத் துறந்தே
        தலைவன் தனைத் தாழ்த்தி
தந்தான் தமையே,
        தரணிபால் தயை கூர்ந்தே.

மாதருள் மேன்மைமிகு மரியவள்
        மகனாய் மலர்ந்து
மரணம் மட்டும் நம் மீட்புக்காய்
        மரமதில் மாட்சி கண்டான்.

ஒப்புயர்வற்ற ஈகையாய்
        மண்ணவர் வாழ்வுக்காய்
விண்ணக நிலைவிடுத்து
        அன்பினால் கருணை நீர்பெருகி
சமுதாய தீவினைக்குள்
        மூழ்கிய ஏழைகள்பால்
தன்னையே சேர்த்துக்கொண்டு
        பெருவெள்ளமாய் உலகம் நிறைந்தான்.

மண்ணைத் தொட்ட மாண்புயர்
        விண்ணகன் அவன்
கனிவுக் கரமேந்திய
        காவியம் தீட்டும் தூரிகையாய்
விடுதலையின் பணியாளனாய்
        இறையன்பின் நீரோடையாய்
வாழவே ஆசிக்கின்றேன்
        அடிமை என் தாழ்வுணர்ந்தே.

இறையே!
கரம்பிடித்து நடத்திடுவாய்.
        நின்னுளம் காட்டிடுவாய்.
எந்தன் சிந்தையெல்லாம் நிறைந்திடுவாய்
        என்னில் நீயே வாழ்ந்திடுவாய்.
காண்பவர் என்னிலே
        உன்னையே காணட்டும்.
அடியனின் செயலனைத்திலும்
        நின் அதிமிகமகிமை துலங்கட்டும்.
நிலையற்ற என் வாழ்வு
        உன்னிலே பொருள் பெறட்டும்.
அன்பே என் மொழியாய்
        அதுவே என் மூச்சாய் மாறட்டும்.

தாகம் தீர்க்கும் பேரொளி


 


ஒப்புயர்வற்ற பேரொளி ஒன்று
    என் அகக்கண்கள் முன்
எல்லையில்லா திசை எங்கும்
    ஆழமும் அகலமும் அறியாத வண்ணம்
ஓங்கி உயர்ந்து கண்கள் கூசிட
    திகட்டாது ஈர்க்கும் பேரழகோடு
நிறைந்திருக்கும் நிலையை
    வெறும் வார்த்தைகளுக்குள்
அடக்கிட முயல்வது
    என் மடமையின் செரிவு.

விளங்கிட முடியா அப்பேரொளியை
    தன்னிலை இழந்து நான் எதிர் கண்டதும்
அணுக்கள் எல்லாம் ஆற்றல் பெருகி
    என் மெய்யுடல் சிதரிடுமோ என்றஞ்சுகையில்
என்னையே சற்று உணர்ந்தறியும்
    நினைவு கொண்டு நோக்குகையில்
அண்டங்களின் ஒளிவிண்மீன்கள் சேர்ந்தே
    நாணி நிற்கும் பேரொளிமுன்
சுட்டி விளக்கொளியின்
    சிறு கதிர் யான்
துணிந்து நிற்கும் பேதமையை
    உணர்ந்தே நாணியது நெஞ்சம்.

எனினும் தாய்சேய் உறவுபோல்
    அன்பினால் இணைந்ததனால்
பேரன்பு பெருகிடவே
    உள்ள தாகம் கட்டியிழுக்கவே
இச்சிற்றொளி தான் பேராசைகொண்டு
    அப்பேரொளியும் சேர்த்தணைக்க
அதனுள் அதுவென்றே
    மாறியதை நான் உணர்ந்தேன்.

எல்லையில்லா பரம்பொருளே,
    படைப்பனைத்தின் அகதாகமே!
நின் அளவில்லா பேரொளியில்
    குறைவு என்றிருத்தல் கூடுமோ?
ஆயினும் சிறுகதிர் என்னை
    தேடி உனில் சேர்ப்பதேன்?
உம் ஆனந்த பேரன்புக்
    கரங்களில் வைத்தே காத்தபோதும்
நிலைதவறித் துணிந்தே விலகியோடும்
    கடுகு மணிவிதையன்றோ நான்.

உன் பேரொளியில் நிறைந்தளிந்து
    கறைந்துறுகும் பேராவல் என்னில்
நிறைந்திருந்த போதிலும் தவறுகின்றேன்
    நொடிக்கு நூறுமுறை.
கரம்பிடித்து நடத்திடுவாய்
    பிரிந்திடாமல் உனக்குள் சேர்ந்திடுவாய்
நின் கருணையும் அன்புமின்றி
    வாழ்வு என்று ஏதுமில்லை
நின் ஒளியில் சேர்ந்திடாமல்
    இச்சுட்டி விளக்கு ஒளிர்வதில்லை.

ஞாயிறு, 30 மே, 2021

காற்றாய் கரைந்திட




 மெய்யுடல் பற்றி

இவ்விடம் நிறைந்து

சிறைகண்டு நாளும்

படைப்பெங்கும் நிகழும்

எண்ணிலா அதிசயங்கள்

காணாதுக் கழிந்திடும்

இம்மனிதச் சிறுவாழ்வுக்

கடந்ததென நிலைமாறி

ஆனந்த அருளால் நிறைந்துக்

        காற்றாய் கரைந்திட மாட்டேனோ?

அன்பினால் அணுக்கள் ஒவ்வொன்றையும்

தொட்டணைக்க மாட்டேனோ?


பொங்கிவரும் அலையுடன் 

தவழ்ந்து நடைபோடுவேன்

நீர்குடித்து மேகமாய்

இப்புவியில் உயிர் வளர்ப்பேன்

மழைத்துளியின் விழுதுகளில்

ஓடி விளையாடுவேன்

சிந்தி விழும் அருவியோடு

விளையாட்டுச் சண்டையிடுவேன்


ஓங்கி உயர்ந்த மலைகளைத்

தொட்டு விளையாடிடுவேன்

பசுஞ்சோலை மரங்களில்

ஊஞ்சலாடி மகிழ்ந்திடுவேன்

பனிவிழுந்த புல்வெளியில்

மெய்மறந்து உறங்கிடுவேன்

மென்மையாய் நடந்து நான்

தென்றல் மொழி பேசிடுவேன்


கடலருகில் மணற்பரப்பில்

புதுக்கவிதைகள் தீட்டிவைப்பேன்

இரவில் நதிக்கரையில்

நட்சத்திரங்களை எண்ணிடுவேன்

நீரில் வரைந்த நிலாக்கோலங்களை

சிறிதாயத்; தீண்டி அலையசைப்பேன்

எங்கும் நிறை பேரழகை

        மெய் நிறுத்திச் சுவைத்திடுவேன்


மலர்கள் பிறந்த சேதியினை

ஊரெங்கும் முரசிசைப்பேன்

பறவைகளின் கரம்பிடித்துத் தினமும்

ஆடல் அறங்கேற்றிடுவேன்

குழலினுள் நெளிந்து நான்

புத்திசை வனைந்திடுவேன்

அசைவுகள் ஒவ்வொன்றையும் 

இசையாய் வடித்திடுவேன்


பட்டாம்பூச்சியின் சிறகினுள்ளே

கண்ணாம்பூச்சி ஆடிடுவேன்

செல்ல மொழி மழலையர்க்கு

முத்தமழை பரிசளிப்பேன்

எங்கும் மகிழ்வினை

நிறைவாய் விதைத்திடுவேன்

இயற்கையின் பேரியக்கத்தில்

என் வாழ்வின் பொருளறிவேன்


கண்ணீர்ச் சுமக்கும் கண்களின் 

வலியுணர்ந்து உடன்நடப்பேன்

ஆற்றலினைச் சேர்த்து நான்

நீசரைச் சிதரிடிப்பேன்

எத்திக்கும் பரவி நாளும்

வேற்றுமையை வேரறுப்பேன்

அமைதியென்னும் நல்லிசையை

நித்தம்பாடிக் களித்திடுவேன்


உயிராய் உணர்வுகளாய்

ஆன்மாவை ஊடுருவுவேன்

காதல் சொல்லும் உணர்வுகளை 

மென்மையாய் உணர்த்திடுவேன்

யாருக்கும் தெரியாத ரகசியங்கள்

எனக்குள்ளே மறைத்து வைப்பேன்

அனைத்திலும் நிறைந்திருக்கும்

இறைமையில் கறைந்திடுவேன்


வாழியவே

      எங்கும் நீராய் படர்ந்திருக்கும்     கட்புலன் கடந்துநிற்கும் பேரறிவை வியந்து சுவைத்து     நனைந்து மகிழ்ந்து கலந்து நீரோடையாய்     பரவிக...