ஞாயிறு, 29 நவம்பர், 2020

பரம்பொருளைத் தேடி

 

 


  உள்ளத்தின் ஆழத்தில்
    உரைகின்ற இறைவனை
உணர்வுகளால் தன் மொழிப் பேசும்
    ஆன்மாவின் ஆன்மாவை
மனிதத்தில் மறைந்திருக்கும்
    புனிதத்தின் பரம்பொருளை
எல்லையில்லா அன்புப் பெருங்கடலை
    எங்கும் பரவி நிற்கும் பேராற்றலை
மனித உள்ளத்தின் ஆழத்தில்
    பிறந்திடும் எதிர்நோக்கின்
ஊற்றாய் உயிராய்
    ஓளியாய் ஆற்றலாய்
மூச்சாய் நிறைந்து
    நிதமும் காக்கும்
உருவிலா இறையை
    எங்கே தேடுகிறீர்கள்?

உள்ளங்களை ஊடுருவும்
    வலியறியா பிணங்கள் உங்கள்
சிதரடிக்கும் வெடிமருந்துக் கைவினைகள்
    தேடி தான் கண்டது என்ன?
உங்கள் துப்பாக்கி முனைகள்
    உலகில் நிறுவியதுதான் என்ன?
சிந்திய செந்நீர்களுக்கு
    விலை யார் தருவார்?
பிரிந்த உயிர்களின்
    இல்லாமையை யார் களைவார்?

உவர்ப்பற்ற உப்பிற்கு
    உணவில் பங்கென்ன?
பொருள் மறைந்த வார்த்தைகளுக்கு
நிலையான புனிதமென்ன?
உணர்வுகள் இழந்தபின்
    சிந்தனைகளின் சிறப்பென்ன?
மனிதம் இழந்தபின்
    மதங்களுக்கு மாண்பென்ன?

சக மனிதரின் துயர் அறியா
    இருள் நிறைந்த இதயத்தில்
சகலத்தின் பேரொளியின்
    கீற்றுக்கள் சேர முடியுமோ?
அண்டத்தின் ஆற்றலினை
    அணுவுக்குள் அடக்க முடியுமோ?
புரியாத புதிரான
    இறைவனை அடைய
அன்பெனும் நூல் பிடித்து
    உள்ளத்தின் ஆழ்துளையில்
மெல்ல மெல்ல இறங்கி வந்து
    பேரின்ப ஊற்றில் தனையிழந்து
யாவும் அவனென கரைவதே வழியென
    உண்மை இனியும் விளங்காதோ?


சனி, 28 நவம்பர், 2020

வலிகள் சுமக்கும் மனங்கள்

 

வலிகள் சுமக்கும் மனங்களை
    வழியெங்கும் காணுகிறேன்.
மனிதம் தொடரும் பயணங்களின்
    புனிதம் தினமும் உணர்கிறேன்.

தொழுநோய்த் தந்த
    ஆறாத புண்கள் போல்
உள்ளிருந்து உருக்கி
    உயிரை வாட்டும்
எத்தனையோ நினைவுகளால்
    கசங்கிய காய இதயங்கள்.

சுமந்திடவும் வலுவின்றி,
    இரக்கி வைக்கவும் வழியறியாது
அன்றாடம் அல்லலுரும்
    அவல வழிப்போக்கர்கள்.

மறைத்து வைத்தக் கண்ணீர் துளிகள்
    வெளியே எட்டிப் பார்க்கையில்
உணர்வுகளை உணர்ந்துகொண்டு
    உடன் நடக்க யாருமின்றி
ஒவ்வொரு பொழுதையும்
    நரகமென வாழ்ந்து முடிக்க
புன்னகை அரிதாரம்
    பூசிக் கொண்டு
தன்னையே மறந்திட
    விடாது தொடரும் போராளிகள்.

தீயாய் சுடும்
    இவர்களின் கதைகளை
செவியேர்க்கும் என் இருதயத்தில
    உணர்வுகள் தரும் பெருவலிகள்.

எதைச் சொல்ல?
    எதைச் செய்ய?
காயம் கொண்ட இதயங்களுக்கு
    என்ன மருந்து நான் தர?

வெற்று வார்த்தைகள்
    வேதனை தீர்க்குமா?
உடைந்த மற்பாண்டம்
    மீண்டும் சேருமோ?

தந்திட வார்த்தையில்லை
    செவிகள் மட்டும் தருகிறேன்.
உணர்வுகளில் நிறைந்து நான்
    என் மனிதம் தொடுகிறேன்.
சில மணித்துளிகள் உங்களுக்காக
    உடன் நடக்கத் துணிகிறேன்.
மனிதர்கள் உங்கள் மாண்பிற்காய்
    என் மனிதம் தருகிறேன்;.
என் ஆன்மாவின் ஆழத்தில்
    உங்களுக்காக வேண்டுகிறேன்.

இறைவா, என்னை நீ
    இன்றே புதுப்படைப்பாக்கு
கண்ணீர் துடைக்கும் துகிலாய்
    என்னை நீ உருவாக்கு.
வேதனை தீர்க்கும் மருந்தாக
    என் வாழ்வை பயன்படுத்து.

வாழியவே

      எங்கும் நீராய் படர்ந்திருக்கும்     கட்புலன் கடந்துநிற்கும் பேரறிவை வியந்து சுவைத்து     நனைந்து மகிழ்ந்து கலந்து நீரோடையாய்     பரவிக...