ஞாயிறு, 27 மே, 2012

ஒரு தேடல்...







புதிரான வினா ஒன்றின்
விடை தேடி அலைகின்றேன்
தாளாதக் குழப்பத்தினுள்
மூழ்கி தினமும் தவிக்கின்றேன்.
பதில் எங்கேப் புரியவில்லை;
கரையின் திசையும் தெரியவில்லை.
அன்புநிறைத் தாயின் மடியில்
கருவாயானக் காரணம் என்ன?
காணாத என்னை ஈன்றெடுக்க அவள்
தாளாத துயரேற்ற காரணம் என்ன?
பத்து மாதம் தவமிருந்து விட்டு - ஒருநாள்
என் கண்கள் விரிந்தக் காரணம் என்ன?
மணல் போல் பரந்துகிடக்கும்
எண்ணிலடங்கா உயிர்கள் நடுவில்
நானும் இங்கே உயிரென மலர
தெளிவாயொரு காரணம் என்ன?
பலலட்சம் அணுக்கள் சேர்ந்தே
மனிதனென உருவளர காரணம் என்ன?
இவன் வாழ்வு செழிக்க வேண்டுமென,
நலம் நூறு காண வேண்டுமென,
கண்ணின் மணி போல் பேணி வளர்க்க
என் அன்பினர்க் கண்ட காரணம் என்ன?
செல்வம் பலவும் தேடி அளித்து,
அறிவும் குணமும் எண்ணுள் சிறக்க,
பலநூறு மாந்தர்கள் தங்கள் நேரம் இழந்து,
எனக்காக வாழ்ந்தக் காரணம் என்ன?
அன்பு எனைச் சுழ்ந்தக் காரணம் என்ன?
நட்பு எனை அறிந்தக் காரணம் என்ன?
மெல்லிய அழகு புன்முறுவல்களும்
புனிதம் நிறைந்தக் கண்ணீர்த் துளிகளும்
எளியோன் இவன்  ஒருவனுக்காக
மண்ணில் உதிர்ந்தக் காரணம் என்ன?
இன்று மட்டிலும் நான் தொலைத்த
என் மணித்துளிகள் ஒவ்வொன்றிலும்
பொருள் அறியாமல் நான் வாழ்ந்த
சிறுவாழ்வுக்கான காரணம் என்ன?
என்று முடியும் என்றரியாத போதும்
அடுத்த நிமிடம் உறுதியில்லாத போதும்
நம்பிக்கையுடன் நான் எதிர்நோக்கியிருக்கும்
என் வாழ்வுக்கான காரணம் என்ன?
புதிரான உலகு தன்னில்
புதிரான என் வாழ்வின் பொருள் தான் என்ன?
எத்தனையோ சொல் சேர்த்து
எத்தனையோ வடிவம் கொடுத்து
எத்தனை முறை வினவினாலும்
அர்த்தம் என்னவோ ஒன்று தான்.
வினாவின் பொருள் அறிந்தும்
பதிலறியா மாணவன் நான்.
பலமணி நேரம் யோசித்தேன்;
சிந்தனைக்குள் தேடிப் பார்த்தேன்.
விடையேதும் அகப்படவில்லை;
குழப்பமும் சிறிதும் அகலவில்லை.
வாழப் போகும் மணித்துளியெல்லாம்
பதிலாய் மாறாது போய்விடின்,
விடையொன்றை எடுத்துரைக்க
சொற்கள் தேடியென்ன பயன்?
சேருமிடம் அறியாது பயணிப்பதே
இப்புவி வாழ்வின் சுவாரசியமோ?
அம்முடிச்சு அகன்றுவிட்டால்
இன்பம் தொலைந்து போய்விடுமோ?
ஆனால், காரணம் ஒன்றை படைத்திடாமல்,
நம் வாழ்வை நாமே செதுக்கிடாமல்,
தானாயொரு காரணம் வருமெனத்
தயங்கி நிற்பது பேதமை ஆகாதோ?
ஆம், சிற்றுளியை கையில் எடுத்துவிட்டு,
அழகிய சிற்பம்தனை மனதில் நிறுத்திவிட்டு
நாமே சிற்பியாய் மாறுவதே
நல் பதிலேன நான் உணர்ந்தேன்.
வாடி நிற்கும் முகங்களில் எல்லாம்
புன்னகையென மாற வேண்டும்.
அறிந்திட்ட மனிதரெல்லாம்
நண்பன் இவனென பேச வேண்டும்.
அதுவே என் வாழ்வின் பொருளென
வாழ இறையருள் புரிய வேண்டும்..

வாழியவே

      எங்கும் நீராய் படர்ந்திருக்கும்     கட்புலன் கடந்துநிற்கும் பேரறிவை வியந்து சுவைத்து     நனைந்து மகிழ்ந்து கலந்து நீரோடையாய்     பரவிக...