
மனக் கதவை மூடியிருந்தால்
என்னாளும் தனிமை தான்..
சிறிதேனும் திறந்து பார்த்தால்
கொடுங்காற்றும் தென்றல்தான்..
நட்புக்குள் அடைக்க எத்தெனித்தால்
சீறும் சிங்கமும் தோழன் தான்...
மனதில் உறுதி ஏற்று விட்டால்
பாருலகும் சிறு துரும்பு தான்.



மஞ்சள் அரைத்துப் பூசி
மங்கள முக மலர்ந்த
அழகு நிறைச் சூரியனே
அதற்குள் ஏன் மறைகிறாய்?
கால் பாதம் ம்ண்ணை
தொட்டிடக் கூட நேரமில்லாமல்
என்றும் அலைந்து திரிந்து
பொருள் தேடும் உலகம் போல
நீயும் வேகம் கொண்டு
விரைந்து மறையப் பார்க்கிறாயா?
இல்லை, காலை மாலை யென
எதையும் அறியாமல்
கணிணி முன் முடங்கிக் கிடக்கும்
எனக்கு தான் அப்படித் தோன்றுகிறதா?
நேரத்தை சேமிக்க
கண்டறிந்த கணிப்பொறி
மனிதர் எங்களின்
நேரம் யாவையும் தின்கிறதே!
மணிக்கணக்கின்றி சிறை பிடித்து
என் கனவுகளை களவாடுதே!
அன்னையின் அன்புரு பக்குவத்தால்
சமைத்த நற்சுவை உணவு எங்கே?
அதை நான் அறுந்திட்ட
வசந்த காலம் எங்கே?
இரவு நேரப் பொழுதினிலே
தேச தெய்வ கதைகள் சொல்லி
நெஞ்சில் பக்தியும் ஒழுக்கமும் தந்த
அந்த இனிய தருணங்கள் எங்கே?
அவள் அன்பு வார்த்தை எங்கே?
கனிவு தேற்றல்கள் எங்கே?
அத்தனையும் இன்று அலைபேசி
அலைகளுக்குள் அடங்கிப் போனதேனோ?
தந்தையின் அறிவுரை எங்கே?
அளவில்லா பாசம் எங்கே?
தங்கையின் சிற்சிறு சண்டைகள் எங்கே?
தனக்குள் அவள் கொண்ட பாசம் எங்கே?
வயல்வெளி வரப்புகளில் நடந்து செல்லும்
மகிழ் நிறை காலம் எங்கே?
தென்னந்தொப்பினில் பருகி மகிழ்ந்த
தேன்சுவை இளநீர் எங்கே?
ஞாயிறு திருப்பலிக்கு
உறவினர் யாவரோடும்
எழுந்து மகிழ்ந்து உள்ளம் உவந்து
சென்ற நாட்கள் எங்கே?
மாலை நேர விவிலியப் பள்ளித் தந்த
நற்பாடங்கள் எங்கே?
எங்கள் வீட்டின் முன் நிற்கும்
கொய்யா மரத்தில்
தேடிப் பரித்து உண்ட
அக்கொய்யா கனிகள் எங்கே?
பக்கத்து வீட்டுப் பாட்டி அறியாமல்
அவள் வளர்த்த மாமரத்தில்
பரித்து சுவைத்து மகிழ்ந்த
சுவைதேர் மாங்கனிகள் எங்கே?
வீட்டின் முன் பாய்ந்திடும்
ஆற்று நீரில் குதித்து
நீந்தி குளித்து விளையாடிய
குளிர் தருணங்கள் எங்கே?
ஆளில்லா கடற்கரையில்
அலைகளோடு உறவாடிய
காற்றோடு கவிபாடிய
கால் நனைத்த காலங்கள் எங்கே?
கண்ணீர் துடைத்த
தோழமை எங்கே?
காசுக்கு கிடைக்காத
பாசம் எங்கே?
சிற்சிறு இன்பங்கள் தந்த
அழகு இளமை காலம் எங்கே?
கடல் அளவு அமுத மகிழ்வில்
எனை மறந்த நாட்கள் எங்கே?
எல்லாம் மின்னணுகளுக்குள்
முடங்கிப் போனதே!
மின்னஞ்சல் தொடர்புகளுக்குள்
சுறுங்கிப் போனதே?
உலகை ஆளும் ஏக்கத்தினால்
உண்மை வாழ்வு கனவானதே!
அந்த சுவர்கலோகம் திரும்பிடுமா?
மகிழ்ச்சிக் கடல்தான் ஆட்கொள்ளுமா?

அழகு கமழும் இயற்கை
அது இறைவன் எழுதிய கவிதை!
குழந்தை பேசும் மழலை
அது மொழியின் கவிதை!
மலர்கள் தரும் நறுமணம்
செடிகள் வடித்த கவிதை!
பறவைகள் செய்யும் ரீங்காரம்
இனிமையின் மறபுக் கவிதை!
பட்டாம்பூச்சியின் நிறங்கள் எல்லாம்
இயற்கை வரைந்த கவிதை!
மண்ணை குளிர்விக்கும் மழையோ
மேகங்கள் பாடிய கவிதை!
அமைதி நிறைந்த உள்ளம்
அவை இன்பந்தரும் கவிதை!
போர்களற்ற அழகு பூமி
அது மனிதத்தின் வெற்றிக் கவிதை!
புத்தாடை உடுத்தி நிற்கும்அந்தி மாலை மேகமே! உன் தோழி பூமி தேவதை சிவந்த ஆடை பூண்டதாலா நீயும் சிவந்த மேனி கொண்டு உன் நட்பைக் காட்டுகிறாய்? தோழி அவள் அணிந்திருப்பது சிவந்த சாயம் இட்டதல்ல அப்பாவி ஈழ சகோதரனின் குருதி வடிந்து சிவந்ததென்று அறியாமல் போனாயோ பேதை மேகமே? இல்லை!? அம்மறவரின் இரத்தம் சிந்தித் தான் நீயும் சிவந்தாயோ நீல வானின் வெண்முகிலே? மனிதனின் சாலை விதிகளில் சிவப்பின் பொருளுணர்ந்து, சிங்களக் கொடியவரும் அதை உணர்ந்திருப்பர் என்றெண்ணி குழந்தைகள் மகளிரெனப் பாராமல் குண்டு மழையில் நனைப்பதையும், குருதிப் பசியில் தன்னிலை மறந்து கண்மூடி கொலைகளம் புரிவதையும், தீயவை யாவையும் நிறுத்திடச் சொல்லிடவே சிவந்த மேனி கொண்டாயோ வெண்முகிலே? பேதை உன் மொழியினை மனதினில் கொள்வரோ சிங்களவர்? தமிழர் யாவரையும் கொல்லுவதே தம் கொள்கையெனக் கொண்டவர், தமிழரின் மூச்சினை உயிரினை நீ நிறுத்திடச் சொல்லுவதாயே எண்ணுவர். அடி ஏனடி பயந்துவிட்டாய்? அதற்குள் முகம் யேன் கருத்துவிட்டாய்? நாளை ஒன்று மலரும், அன்று அமைதி திரும்பும்! ஈழர் தம் நாட்டில் இனிய வாழ்வு நிலை மலர்ந்திடும்! அன்று நீ மகிழ்வின் தென்றலில் குளிர்ந்து, ஆனந்த வான் மழையை சிந்தி, இரத்தக் கறை படிந்து சிவந்த நில மகளின் முகத்தை துடைத்திடு!
எங்கும் நீராய் படர்ந்திருக்கும் கட்புலன் கடந்துநிற்கும் பேரறிவை வியந்து சுவைத்து நனைந்து மகிழ்ந்து கலந்து நீரோடையாய் பரவிக...