செவ்வாய், 19 ஜூலை, 2011
அவள் அறிந்தது...
என் உயிரின் ஆருயிரை
காண ஆவல் கொண்டு,
மாதம் ஈரைந்து
பத்தியம் கண்டு,
வேண்டி நின்ற அருமை மைந்தன்
பிறந்திட்ட பொழுது,
என் உயிரின் ஆழம் வரை
வருத்தும் அவ்வலியும்
சுகமாய்ப் போன அதிசயத்தை
எப்படி நான் சொல்லிடுவேன்?
பூவுலகின் மலர்களெல்லாம்
கடன் கேட்குமே,
செல்ல மகனவன்
கைவிரல் தீண்டலை!
தேனினிய தமிழும்
தோற்றுப் போகுமே,
செவித் திகட்டா - அவன்
மழலை மொழியிடம்!
கவிவேந்தர்களின் கவிதைகளெல்லாம்
கைகட்டி நிற்குமே,
தீஞ்சுவை பொழியும்
அவன் தேன்குரல் முன்னே!
கண்கோடி கிடைத்தாலும்
பற்றாமல் போகுமே,
தத்தித் தவழ்ந்து நடக்கும்
அவன் முதல் அடியினைக் காண!
பார்த்துப் பார்த்து
பரவசம் கொண்டு
எப்போது பசிக்கும்
எது நலம் பயக்குமெனத்
தேடி அறிந்து
உள்ள முவந்து,
உலகம் அவனெனக் கொண்டே
சீராட்டி மகிழ்ந்தேன்.
காலம் செல்லும் வேகத்திலே
நாளும் அவன் வளர்ந்தாலும்
பேதையிவள் விழிகளிலே
என்றுமவன் மழலையே!
கல்விச் சாலை காணுகிறான்;
நாளும் புதியன கற்கின்றான்;
சான்றோர் மொழிகள் பேசுகிறான்;
புதுமை பலவும் சொல்கிறான்;
பெருமிதம் கொண்டு மகிழும்
என்னை பார்த்தே,
"இது கூட தெரியாதா" என்று
மலர் இதழ் சிரிக்கின்றான்.
நான் பெண்ணாய் அழிந்து
தாயாய் பிறந்ததனால்,
அவன் உணர்வுகள் ஒன்றே
நான் தேடிய அறிவா யானதனால்
அவன் சிரிப்பும் மகிழ்வும்
கவலையும் கண்ணீரும்
கோபமும் எண்ணமும்
தேடலும் தவிப்பும்
அசைவுகள் ஒவ்வொன்றுமல்லாது எனக்கு
வேறேது தெரியும்!
இந்த அறியாமையும் எனக்கு
பெருமிதம் தானென்றும்
தாயான யெனக்கு
வேறேது வேண்டும்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வாழியவே
எங்கும் நீராய் படர்ந்திருக்கும் கட்புலன் கடந்துநிற்கும் பேரறிவை வியந்து சுவைத்து நனைந்து மகிழ்ந்து கலந்து நீரோடையாய் பரவிக...
-
புத்தாடை உடுத்தி நிற்கும் அந்தி மாலை மேகமே! உன் தோழி பூமி தேவதை சிவந்த ஆடை பூண்டதாலா நீயும் சிவந்த மேனி கொண்டு உன் நட்பைக் காட்டுகிறாய்?...
-
எங்கும் நீராய் படர்ந்திருக்கும் கட்புலன் கடந்துநிற்கும் பேரறிவை வியந்து சுவைத்து நனைந்து மகிழ்ந்து கலந்து நீரோடையாய் பரவிக...
-
எழுந்திடும் சூரியனின் முதல் ஒளிக்கீற்று தான் பட்டு உடைந்த கண்ணாடி துண்டொண்டு ஒளிர்ந்தே இருள் ஒளிந்தது போல் என் இருள் இதயக் கூ...
