மனித நேயம் கொல்லும்
காட்டுமிராண்டி உலகத்தில்
நான் மனசாட்சியைக் கொல்லும்
கோழையானக் காட்டுமிராண்டி.
நாடு எக்கேடு கெட்டுப் போனாலென்ன ?
மக்கள் எக்கதி ஆனாலென்ன ?
என் வெள்ளைச் சட்டையில் கறையில்லை என்கும்
உபயோகமில்லா உத்தமன் நான்!
உலமெல்லாம் கழிவுநீரில் மூழ்கினாலும்
துர்நாற்றம் வானளாவிப் படர்ந்தாலும்,
என் வீட்டுச் சன்னலுக்குள் பதுங்கியிருந்து
என் வெற்று உடலை அடைகாக்கும் கோழி நான்!
விளக்கில் எண்ணையாய் அமர்ந்து கொண்டு
எரிவது நானெல்ல திரிதான் என்கும்
உண்மை உணரா பேதமை கொண்ட
கற்ற உயர் நிலை மூடன் நான்!
இலஞ்சத்தை சாடி வாய்கிழிய பேசினாலும்
எனக்கென வந்தால் என் வயிறே முதலிடம்.
நாடு போகும் போக்கைக் கண்டு,
தேனீர் கடையில் வெகுண்டெழுந்து முறையிடுவேன்.
பின்பு தேனீர் தீர்ந்த மறுநிமிடம்
என் தியான நிலை மீண்டும் தொடர்ந்திடுவேன்.
பச்சொந்தி இனம் கூட
என்னோடு தோற்று விடும்.
கருங்கல் பாறை கூட, உணர்ச்சியில்
என்னை முந்தக் கூடும்.
என் வீடு, என் வாழ்வு போதும் என்று
அத்தனையும் இழந்த பரதேசி நான்!
வஞ்சகர் கையில் ஓட்டென்ற பெயரில்
நாட்டை மலிவு விலைக்கு விற்றுவிட்டு,
அவர்கள் திருந்தி வாழ
கடவுளை வேண்டும் பக்தன் நான்!
நாட்டைக் காக்க யாரேனும் வேண்டும்
ஆனால் அவர் என்னைத் தவிர வேராக வேண்டும் என்று,
தன்னைத் தானே மறைத்துக் கொண்டு
சந்திரனை ஒளி வீசச் சொல்லும் சூரியன் நான்!
வாழ்வு, கல்வி எல்லாம் இலஞ்சமாய் வாங்கிக்கொண்டு
தேசத்தை ஏமாற்றும் சான்றொன் நான்!
என் நிலை எனக்கு புரிந்த போதும்
ஒரு போதும் திருந்துவதில்லை.
என் தேசத்தின் கண்ணீர் துடைக்க,
என் கரம் நீள்வதில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக