விண்மீன்களின் ஒளியழகை
விழிகளில் சேர்த்தது இருள்.
காதுகள் அடைந்த குயிலினிசை
கேட்கச் செய்தது அமைதி.
மெல்லிய மணல் துகள்களை அழகாய்
செதுக்கியது ஆர்ப்பரிக்கும் அலை.
தளிர்த்தோங்கும் நீலமரச் சோலைகள்
விழுந்துடைந்த விதைகளின் எழுமை.
முரண்களின் எழிலோவியமே
இயற்கையின் இயலியக்கம்.
முரண்கள் கலைந்தளிந்தால்
வெற்றுத் தாளென வாழ்வாகும்.
உரக்கத்தான் மொழிகிறது
இயற்கை இப்பேருண்மையை
தனக்குள் இழந்த மனிதமனம்
ஏனோ ஏற்க மறுக்கிறது.
கணுக்களில்லா ழூங்கிலுண்டோ?
நெளியாத நதியுமுண்டோ?
நேர்கோடு ஒவியமாகுமா?
வளையாத பாதை முகடு சேருமா?
சுவைதேர் வாழ்க்கையினை
தம் சூத்திரங்களுள் சுருக்கினால்,
அது பொருளற்ற நாடகமாய்
சுவையிழந்து போய்விடும்.
நம் வாழ்வு தனித்ததல்ல
தனித்து தன்னை பிரித்துக்கொள்ள.
படைப்பின் கடன்தொகையே நம் உடலின் அணுக்கள்
இதில் நமதென்று எதைச்சொல்ல?
வீசிடும் மெல்லிய தென்றல்
நம் கண்ணீரைக் கரைத்துச் செல்லும்.
எங்கும் எதிலும் எழுமொலி
வாழ்வில் இன்னிசைச் சேர்க்கும்.
உயர்ந்தும் தாழ்ந்தும்
நேளிந்தோடும் அலைகதிர் போல
எதிர்பாரா திருப்பங்களே
வாழ்வின் அதிசயங்கள்.
வளைவுகளே புத்தொளிச் சேர்க்கும்
கண்ணாடித் திரைகள்.
அவையில்லாது போனால்
சுவையேது உலகில்.
வாழ்வில் வரும் வேதனைகள்
வழிகாட்டும் கரங்கள்.
வந்த வழி ஆராய்ந்து
பெற்றவை எண்ணி மனமகிழ்ந்து
புதிதாய் பிறந்து
போகும் வழி தேர்ந்திடவே
இறைவனின் கருணை பொழிந்திடும்
பயண இடைநிலை தருணங்கள்.
இன்பமும் துன்பமும் சுகமே
என்றும் உறவில் இணைந்திருக்கையில்
பெற்றதெல்லாம் பெருஞ்செல்வம்
கண்டதெல்லாம் அதிசயம்.
உடன் வந்தவரெல்லாம் பெருங்கொடை
வாழ்வு தந்ததெல்லாம் நலமேயென
அனுபவித்து உணர்ந்தறிந்தால்
அனைத்தும் அருள்சேர் கணங்கள்.
நிச்சயமற்ற தன்மையே
வாழ்வின் பேரழகு.
கணக்கிடாமல் சுவைத்து
வருவதை ருசித்து
சின்ன சின்ன நிகழ்வுகளில்
வண்ண வண்ண நினைவுகள் சேர்த்து
மெல்ல மெல்ல ரசித்து
மகிழ்ந்தே கனவுகள் வளர்ப்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக