பார் புவி யாவும்
படைத்தாளும் பரம்பொருள்
பாவத்தில் பரிதவிக்கும்
படைப்புகள் நம்மில் பரிவுகொண்டு
தன்னிலைத் துறந்தே
தலைவன் தனைத் தாழ்த்தி
தந்தான் தமையே,
தரணிபால் தயை கூர்ந்தே.
மாதருள் மேன்மைமிகு மரியவள்
மகனாய் மலர்ந்து
மரணம் மட்டும் நம் மீட்புக்காய்
மரமதில் மாட்சி கண்டான்.
ஒப்புயர்வற்ற ஈகையாய்
மண்ணவர் வாழ்வுக்காய்
விண்ணக நிலைவிடுத்து
அன்பினால் கருணை நீர்பெருகி
சமுதாய தீவினைக்குள்
மூழ்கிய ஏழைகள்பால்
தன்னையே சேர்த்துக்கொண்டு
பெருவெள்ளமாய் உலகம் நிறைந்தான்.
மண்ணைத் தொட்ட மாண்புயர்
விண்ணகன் அவன்
கனிவுக் கரமேந்திய
காவியம் தீட்டும் தூரிகையாய்
விடுதலையின் பணியாளனாய்
இறையன்பின் நீரோடையாய்
வாழவே ஆசிக்கின்றேன்
அடிமை என் தாழ்வுணர்ந்தே.
இறையே!
கரம்பிடித்து நடத்திடுவாய்.
நின்னுளம் காட்டிடுவாய்.
எந்தன் சிந்தையெல்லாம் நிறைந்திடுவாய்
என்னில் நீயே வாழ்ந்திடுவாய்.
காண்பவர் என்னிலே
உன்னையே காணட்டும்.
அடியனின் செயலனைத்திலும்
நின் அதிமிகமகிமை துலங்கட்டும்.
நிலையற்ற என் வாழ்வு
உன்னிலே பொருள் பெறட்டும்.
அன்பே என் மொழியாய்
அதுவே என் மூச்சாய் மாறட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக